தமிழ்நாடு

பாலியல் புகார்: காத்திருப்போர் பட்டியலில் இருந்த முன்னாள் டிஜிபி சஸ்பெண்ட்

பாலியல் புகார்: காத்திருப்போர் பட்டியலில் இருந்த முன்னாள் டிஜிபி சஸ்பெண்ட்

jagadeesh

பாலியல் சர்ச்சையை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த மாதம் பெரம்பலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு, டிஜிபி அந்தஸ்திலான காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பெண் எஸ்.பி. அளித்த புகார் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. புகார் அளிக்கக் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்த புகாரில் மாவட்ட எஸ்.பி. மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், டிஜிபி அந்தஸ்திலான அதிகாரியை ஏன் இன்னும் பணியிடை நீக்கம் செய்யவில்லை? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் சிபிசிஐடி காவல்துறையினர் அண்மையில் முதற்கட்டமாக 4 மணி நேரம் நேரில் தீவிர விசாரணை நடத்தினர். இதனை அடுத்து புகாரில் சிக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபியை தேர்தல் ஆணையம் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.