முரசொலி செல்வம்  எக்ஸ் தளம்
தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகன் ‘முரசொலி’ செல்வம் காலமானார்

எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம் காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் கணவர் திரு. செல்வம். இன்னொரு வழியில், கலைஞர் கருணாநிதியின் சகோதரியின் மகன்தான் செல்வம். இவர், திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவர் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, தொடங்கப்பட்ட திமுகவின் நாளிதழான முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு அடுத்தபடியாக நீண்டநாள் முரசொலி பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியராக இருந்துள்ளார் செல்வம். தற்போது இவரின் வயது 84. இவர் 50 ஆண்டுகளுக்கு மேல் முரசொலியின் வளர்ச்சிக்காக பணியாற்றி உள்ளார்.

பல திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ள இவர், முரசொலி நாளிதழில் ‘சிலந்தி’ என்ற தலைப்பின் கீழும் பல ஆணித்தரமான கட்டுரைகளை எழுதியவர்.

இவருக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென இன்று காலை இவரின் உயிர் பிரிந்திருக்கிறது. நேற்று இரவு கூட, முரசொலி நிர்வாகிகளோடு செல்போனில் செல்வம் கலந்துரையாடினார் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இவர் காலாமானார் என்ற அதிர்ச்சிகர செய்தி வெளியாகி திமுக தொண்டர்களையும், முரசொலி நிர்வாகிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறப்பு செய்தியை கேட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் கண்ணீர் சிந்தியதாக திமுக-வினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இவரின் இறப்பு தொடர்பாக, பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில், “சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, பெங்களூரில் இருந்து சாலை மார்க்கமாக கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் அஞ்சுகம் வீட்டிற்கு செல்வத்தின் உடல் கொண்டு வரப்படவுள்ளது. இன்று மதியம் மூன்று மணிக்கு மேல் பொதுமக்கள் மற்றும் திமுக-வினர் அஞ்சலி செலுத்த உடல் வைக்கப்படும் என்றும், நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோபாலபுரத்தில் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து அங்கு திமுக அமைச்சர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை பலரும் குவிந்துவருகின்றனர். பல அரசியல் கட்சியினரும் செல்வத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.