எடப்பாடி பழனிசாமி pt desk
தமிழ்நாடு

“நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு அவர்கள் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” - எடப்பாடி பழனிசாமி

“திமுக ஆட்சியில எந்தவித புதிய திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

PT WEB

செய்தியாளர்: இஸ்மாயில்

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் மற்றும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்...

“தமிழ்நாட்டில் நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்”

cm stalin

“இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் திமுகவில் குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக கட்சியல்ல; அது கார்ப்பரேட் நிறுவனம். ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார். ஆனால், தமிழ்நாட்டிற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்.

“நாங்கள் கொண்டுவந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்”

அதிமுக ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் ஆறு சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, பல ஆண்டுகளாக ஏரிகள் தூர்வரப்படாமல் இருந்தன. எங்கள் முன்னெடுப்பால்தான், தமிழ்நாடு முழுவதும் ஏரிகள் தூர்வாரப்பட்டன. அதன் மூலமாக ஏரியில் இருக்கும் வண்டல் மண்களை விவசாயிகள் இலவசமாக எடுத்துச் சென்று பயனடைந்தனர். நாங்கள் கொண்டுவந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்துக் கொண்டிருக்கிறது திமுக. எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை.

"உதயநிதி ஸ்டாலின் என்ன சாதனை செய்துவிட்டார்?"

udhayanidhi

உதயநிதி ஸ்டாலின் என்ன சாதனை செய்துவிட்டார்? அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் ஸ்டாலின் மகன் என்பதை தவிர வேறு எதுவும் சாதனை இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக உழைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டு கருணாநிதி குடும்பத்தில் பிறந்தார் என்பதற்காக துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் சிறப்பாக ஊழல் நடைபெறுகிறது”

ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று 41 மாதங்கள் ஆகிவிட்டன. தொடர்ந்து ஊழல்கள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடைபெறவில்லை; தமிழ்நாட்டில் சிறப்பாக ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் 36,000 போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்தோம். ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக கூட்டத்திற்கு அனுமதி தருவது கிடையாது.

Public meeting

தமிழ்நாட்டில் ஜனநாயகம் கிடையாது; தமிழ்நாட்டில் சர்வாதிகாரம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் அவர்களே... எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சமாளிக்க கூடிய தில்லும் தெம்பும் திராணியும் அதிமுக-விற்கு இருக்கிறது.

“போதைப் பொருட்களை தடுக்க வேண்டும்”

டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு ஒரு கோடி பாட்டில்கள் விற்கின்றன. ஒரு நாளுக்கு பத்து கோடி என்றால் வருஷத்துக்கு 3000 கோடி ரூபாய் ஊழல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்க வழக்கங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாகி பலரின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது; போதைப் பொருட்களை தடுக்க வேண்டும் என கூறினேன். ஆனால், இதுவரை இந்த அரசாங்கம் செய்யவில்லை. முதலமைச்சர் ‘நான் தந்தையாக இருந்து பேசுகிறேன். போதைப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள்’ என பேசுகிறார்.

EPS

மூன்று ஆண்டுகளாக நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அறிக்கையின் வாயிலாக தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். முறையாக காவல்துறையினரை பயன்படுத்தி சுதந்திரமாக அவர்களை செயல்பட விடுத்திருந்தால் தடுத்திருக்கலாம். இப்படிப்பட்ட நிலை வந்திருக்காது. ஆனால், ஸ்டாலின் அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது என்பதை ஸ்டாலின் ஒத்துக் கொள்கிறார்” என்று பேசினார்.