அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆறுகுட்டி திமுகவில் இணைய இருக்கிறார். இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை சுற்றுப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள நிலையில், பொள்ளாச்சியில் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைய இருப்பதாக ஆறுகுட்டி புதிய தலைமுறைக்கு பிரத்யேக தகவல் அளித்திருக்கிறார்.
- 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 69,260 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் ஆறுகுட்டி.
- 2016 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு 8,025 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார் ஆறுகுட்டி.
- ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக குழப்பம் ஏற்பட்டபோது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக அறியப்பட்ட ஆறுகுட்டி, பின்னர் மக்கள் கோரிக்கையை ஏற்பதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.
- 2021 ஆம் ஆண்டு அவருக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்கப்படாத நிலையில் சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
- திடீரென கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களை சந்தித்த ஆறுகுட்டி அதிமுகவை சாதிகட்சியாக மாற்றி விட்டனர் என்றும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக்கொண்டு வேறு யாராவது ஒருவர் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
- ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மூன்று முறை ஆறுகுட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.