தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை - வனத்துறை

வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை - வனத்துறை

rajakannan

கோவை வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என தமிழக வனத்துறை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபத்திற்காக தொண்டாமுத்தூர் தொகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் பலர் கட்டாய பணம் வசூல் செய்வதாகவும், வனப்பகுதிக்கு செல்ல பலரை அனுமதிப்பதாகவும் கூறி கோவையைச் சேர்ந்த செந்தில் குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

“வனப்பகுதியில் தங்குவதால் காடுகள் அழிக்கப்படுவதோடு, வனவிலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையும் உருவாகி உள்ளது. குரங்கணி தீ விபத்து போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது” என தம்முடைய மனுவில் செந்தில் குமார் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “வெள்ளியங்கிரி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், சுயம்பு ஆண்டவர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை. கோயில் வழிபாடு நடத்த மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்” என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, “செந்தில்குமார் வழக்கில் பொது நலன் இருப்பதாக தெரியவில்லை. அரசியல் கட்சியினர் வசூல் செய்வது போல தன்னால் முடியவில்லை என்ற காரணத்தினால் தொடரப்பட்டுள்ளது போல தெரிகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.