தமிழ்நாடு

சின்னத்தம்பியை பிடிக்கும் முயற்சியில் களமிறங்கிய வனத்துறை !

சின்னத்தம்பியை பிடிக்கும் முயற்சியில் களமிறங்கிய வனத்துறை !

Rasus

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே கரும்புத் தோட்டத்தில் பதுங்கியுள்ள காட்டுயானை சின்னத்தம்பியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காட்டு யானை சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்றாமல், மீண்டும் வனத்துறைக்கு அனுப்ப வேண்டும் என முரளிதரன், அருண் பிரசன்னா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனிடையே சின்னத்தம்பியை பிடிக்க அனுமதி வழங்குமாறு வனத்துறை கோரிக்கை விடுத்திருந்தது. இவ்வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன், சின்னத்தம்பியை பிடிக்கும்போது காயப்படுத்தவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது எனவும் அறிவுறுத்தியது. அத்துடன் நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, உடனே அதனை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்லலாம் எனக் கூறியது. அத்துடன் சின்னத்தம்பியை முகாமில் வைப்பதா அல்லது நிரந்தரமாக காட்டுக்குள் கொண்டு சென்றுவிடலாமா? என்பதை வனத்துறை தலைமை பாதுகாவலர் முடிவுசெய்யலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவையடுத்து உடுமலைபேட்டை அருகே கரும்புத் தோட்டத்தில் பதுங்கியுள்ள சின்னத்தம்பியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சின்னத்தம்பியை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க மருத்துவர் அசோகன் தலைமையிலான குழுவினர் திருப்பூர் சென்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவில் யானைக்கு காயம் ஏற்படமால் பிடிக்க வலியுறுத்தியதால், ஜே.சி.பி வாகனத்தை பயன்படுத்த வேண்டாம் என வனத்துறை முடிவு செய்துள்ளது. அத்துடன் சின்னத்தம்பியை பிடிக்க மேலும் இரண்டு கும்கி யானைகளை பயன்படுத்தலாமா என்ற ஆலோசனையிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானையை லாரியில் ஏற்றுவதற்கு சாய்வுதளம் ஏற்படுத்திய பின்பே மயக்க மருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சின்னத்தம்பியை பிடிப்பதற்கான ஆபரேசன் மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளதாக தெரிகிறது.