தமிழ்நாடு

கும்கி, மயக்க ஊசி இல்லை...பழங்களை காட்டியே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படும் ரிவால்டோ யானை

கும்கி, மயக்க ஊசி இல்லை...பழங்களை காட்டியே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படும் ரிவால்டோ யானை

Rasus

தீப்பற்றி எரியும் டயரோடு அஞ்சி ஓடிய யானையை நாம் மறந்திருக்கமுடியாது. அதே பகுதியில் சுற்றிவரும் மற்றொரு யானையை பாதுகாக்கும் நோக்கில் அதனை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்துச்செல்ல வனத்துறையினர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மசினக்குடியில் ரிவால்டோ யானையை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல ஆண்டுகளாக இப்பகுதியில் சுற்றிவரும் ரிவால்டோ, பத்தாண்டுகளுக்கு முன் தும்பிக்கையில் அடிபட்ட காயத்துடன் சுற்றிவந்தது. வனத்துறையினர் அளித்த சிகிச்சையில் மீண்ட யானை, அதன்பிறகு அங்கேயே சுற்றிவருகிறது. இந்த யானை மீது இப்பகுதி மக்களுக்கு அச்சம் கலந்த பாசம் உள்ளது. ஆனால் யானையை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்துச்சென்று பராமரிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்தது.

யானை திட்ட துணை இயக்குநர் முத்தமிழ்செல்வன் ரிவால்டோவை ஆய்வு செய்தார். இதையடுத்து கிடைத்த அனுமதியால், ரிவால்டோ, வளர்ப்பு யானைகள் முகாமுக்கு அழைத்துச்செல்லப்படுகிறது. கும்கிகள், மயக்க ஊசி என எந்த முயற்சியும் இல்லாமல் பழங்களை காட்டியே இதனை அழைத்துச்செல்கிறார்கள் வனத்துறையினர்

பத்தாண்டுகளுக்கு முன் யானை காயம்பட்டபோது உதவிய பண்டன் என்ற வேட்டை தடுப்பு காவலர் மற்றும் கணேஷ் என்ற வனத்துறை ஊழியர் உதவியுடன் ரிவால்டோவை அழைத்துச்செல்லும் பணிகள் நடைபெறுகிறது. களைப்பாகும் நேரத்தில் தண்ணீர், வேண்டும்போது பழங்கள் என கொடுத்து யானையை நடத்தியே அழைத்துச் செல்கிறார்கள் வனத்துறையினர்.

யானைக்கு மூச்சுவிடுவதில் உள்ள சிரமத்தை போக்குவது, அதற்கான உணவு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள்