தமிழ்நாடு

தாளவாடி அருகே புலி தாக்கி பசுமாடு பலி - வனத்துறையினர் விசாரணை

தாளவாடி அருகே புலி தாக்கி பசுமாடு பலி - வனத்துறையினர் விசாரணை

Sinekadhara

தாளவாடி அருகே புலி தாக்கியதில் மாடு உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தமிழகம் - கர்நாடக எல்லையான தாளவாடி வனப்பகுதியில் சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தாளவாடி சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வகுமார் தோட்டத்தில் 6 மாடுகளை பாரமரித்து வந்தார்.

திங்கள்கிழமை தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பிற்பகலில் மாடுகள் மிரட்சியுடன் கத்தும் சத்தம் கேட்டு தோட்டத்திற்கு சென்றபோது பட்டப்பகலில் பசு மாட்டை புலி கடித்து குதறுவது தெரியவந்தது. செவ்வகுமார் சத்தம்போடவே, பயந்துபோன புலி மாட்டை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது. கட்டியிருந்த மாடுகளை தாக்கியதில் ஒரு மாடு உயிரிழந்தது. மற்றொரு பசு காயத்துடன் தப்பியது. இது குறித்து கிராம மக்கள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அங்குவந்த வனத்துறை கால் தடம் மற்றும் இறந்த மாடுகளை ஆய்வு செய்தனர்.

அதன் கால்தடத்தை ஆய்வு செய்ததில் புலி தாக்கி மாடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. கடந்த 2 மாதத்தில் 3 காவல் நாய்கள், 2 கன்றுகுட்டிகள் பலியானது. வனத்துறையினர் புலி நடமாட்டத்தை கேமரா வைத்து கண்காணித்து கூண்டுவைத்து பிடித்து இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.