elephant pt desk
தமிழ்நாடு

அச்சுறுத்தும் அரிக்கொம்பன் காட்டுயானை: பிடிப்பதா? விரட்டுவதா? - வனத்துறை ஆலோசனை

அரிக்கொம்பன் காட்டு யானையை பிடிப்பதா அல்லது வனத்துக்குள் துரத்துவதா என்பது குறித்து வனத் துறையினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

webteam

தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி அருகே 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தநாச்சி அம்மன் கோவில் பகுதியில் அரிக்கொம்பன் காட்டு யானை முகாமிட்டுள்ளது. அரிக்கொம்பனை பிடிப்பதா அல்லது துரத்துவதா என ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், இரண்டு நடவடிக்கைகளுக்கும் தமிழக வனத்துறை தயாராக உள்ளதென தெரிகிறது.

இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் அரிக்கொம்பன் முகாமிட்டிருக்கும் கூத்தனாட்சி கோயில் பகுதியைச் சுற்றிலும் தயாராக உள்ளனர். அதேபோல், டாக்டர் பிரகாஷ் தலைமையிலான வனத்துறையின் ஒரு கால்நடை மருத்துவக் குழுவும் தயாராக உள்ளது.

elephant

இவர்கள் அனைவரும் இணைந்து, முதலில் அரிக்கொம்பனின் குணாதிசியங்களை கண்டறிவர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில், “முக்கியமாக அரிக்கொம்பனின் சுறுசுறுப்பு, திடகாத்திரம், அசைவுகள், நகர்வுகள், நடையின் வேகம் ஆகியவை ஆய்வு செய்யப்படும். அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ப அதை துரத்துவதா பிடிப்பதா என முடிவெடுக்கப்படும். அரிக்கொம்பன் அமைதியாக ஒரே இடத்தில் நின்றோ அல்லது படுத்தோ சில மணி நேரங்கள் ஓய்வெடுக்கும் நிலை உருவானால் அதை பிடிக்கும் முயற்சி நடத்தப்படும்.

பிடிக்கும் முயற்சி நடந்தால் அரிக்கொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்தப்படும். அதற்காக துப்பாக்கி மூலம் மயக்கு ஊசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மூணாறு சின்னகானவில் ஆறு மயக்க ஊசிகள் செலுத்தி அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குள் மீண்டும் அரிக்கொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்துவது, சற்று ஆபத்து என்பதால் இப்போது மயக்க ஊசி போடப்படும் முடிவெடுக்கப்பட்டாலும், ஊசியில் மருந்தின் அளவு சற்று குறைக்கப்படும்

wild elephant

மயக்க ஊசியின் அளவு குறைக்கப்படும் பட்சத்தில் அரிக்கொம்பன் மயக்க நிலைக்கு வருவதற்கு அதிக டோஸ்கள் தேவைப்படும். மயக்க நிலை வருவதற்கு ஏற்ப மயக்க மருந்தின் டோஸ்கள் படிப்படியாக அதிகரிக்கப்படும். அதேநேரம் அரிக்கொம்பனுக்கு செலுத்த தயாராக உள்ள மயக்க மருந்து, அதை மயங்கி விழச்செய்யும் டோஸ்கள் அல்ல.

மாறாக அதன் உடல் எங்கும் அசைக்க முடியாத அளவிற்கு மரத்துப்போகச் செய்யும் மயக்க மருந்துகளாம். அதாவது மூளை செயல்படும்... முழு கான்சியஸ் இருக்கும்; ஆனால் உடலை அசைக்க மட்டும் முடியாது. மூணாறு சின்னக்கனால் பகுதியில் அரிக்கொம்பனை பிடிக்க பயன்படுத்தப்பட்ட அதே மயக்க மருந்து இங்கும் பயன்படுத்தப்படும்.

மயக்க நிலை, மரத்த நிலைக்கு வருவது அது துதிக்கை ஆட்டாமல், காது மடல்களை அசைக்காமல், வால் அசைக்காமல் இருப்பது மூலம் உறுதி செய்யப்படும். மயக்க நிலைக்கு வந்தது உறுதி செய்யப்பட்டவுடன் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அவை லாரியில் ஏற்றப்படும். அரிக்கொம்பைனை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தால் அதை கொண்டு சென்று விடப்படும் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெள்ளி மலை என தற்போதைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Elephant

மீண்டும் வனத்திற்குள் சென்று விடுவதா அல்லது யானைகள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைத்து அதற்கு புத்துணர்ச்சி மற்றும் மனமாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதா என அரசுதான் முடிவு எடுக்கும். எதுவாக இருப்பினும் அரிக்கொம்பன் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு மீண்டும் வராத வண்ணம் விரட்டும் நடவடிக்கையாக அது இருக்கும்.

அடர்ந்த வனப்பகுதிக்கு செல்லும் பாதை மட்டும் திறந்து விடப்பட்டு பொதுமக்கள் வசிக்கும் ஒரு பகுதிக்கு வரும் பாதைகள் கனரக வாகனங்களால் அடைக்கப்படும். துரத்தப்பட்ட அரிக்கொம்பனின் நகர்வுகள் ரேடியோ காலர் சிக்னல் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.