தமிழ்நாடு

தேக்கடியில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

தேக்கடியில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

Rasus

கேரளாவில் சுற்றுலா சீசன் முடிந்து தங்கும் விடுதி கட்டணங்கள் குறைந்ததால், இடுக்கி மாவட்டம் தேக்கடிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுற்றுலா தலங்களுக்குப் பெயர்பெற்ற கேரளாவில் தற்போது சுற்றுலா சீசன் முடிவடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையோடு புத்தாண்டையும் சேர்த்த விடுமுறை மற்றும் தமிழகத்தின் பொங்கல் விடுமுறையும் நிறைவடைந்ததால் கோவளம், கொச்சின், வயநாடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களின் சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் குறைந்துள்ளது.

“ஆஃப் சீசன்” எனப்படும் இந்த நேரத்தில் தங்கும் விடுதிகளின் முன்பதிவு, சிறப்புக் கட்டணம் என்பதெல்லாம் முற்றுப்பெற்றுவிட்டது. நாள் வாடகை 10,000 இருந்த விடுதி கட்டணங்கள் பாதியாக குறைந்துள்ளது. அதற்கும் ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. இந்தக் கட்டணக்குறைவு காலத்தை குறிவைத்து, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் கேரளாவில் குவிந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி வருகின்றனர். அங்கு முல்லைப்பெரியார் அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியின் படகுப் போக்குவரத்து மற்றும் வனத்திற்குள் முகாமிடல், மூங்கில் தோணிகளில் பயணம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு மகிழ்விப்பு திட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்னும் முடிவடையாததால் இந்த ஜனவரி மாத இறுதி வரையிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என கேரள சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.