சென்னை மண்ணடியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2 பேர் ஒரு கிடங்கில் இருந்து பெட்டிகளை காரில் ஏற்றியிருப்பதைக் கண்டு விசாரித்திருக்கின்றனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து பெட்டியை திறந்து பார்த்ததில் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பது தெரியவந்திருக்கிறது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கிடங்கு உரிமையாளர் சாந்திலால் வெளிநாட்டில் இருந்து சிகரெட்டுகளை இறக்குமதி செய்து கள்ளத்தனமாக விற்பனை செய்தது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, கிடங்கு ஊழியர் பிரவீன் மற்றும் கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த கார் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கிடங்கு உரிமையாளரை தேடி வருவதாக தெரிவித்தனர்.