திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பாக கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை மெகா ஸ்கிரீனில் கண்டுகளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பூட்டு நகரம், புகையிலை நகரம், பிரியாணி சிட்டி என்றழைக்கப்படும் திண்டுக்கல், கால்பந்து நகரம் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. 1985 ஆண்டு உதயமான திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் பல விளையாட்டு வீpரர்களை உருவாக்கியதோடு தேசிய அளவிலான மகளிர் போட்டிகளையும் நடத்தி தேசிய அளவில் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், கால்பந்து ரசிகர்கள் தனித் தனியாக வீட்டில் அமர்ந்து போட்டியை காண்பதைவிட ஒரே இடத்தில் அமர்ந்து அதுவும் மெகா ஸ்கிரீனில் போட்டியை பார்ப்பது தனித்துவம்தான். ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளையும் மெகா ஸ்கிரீனில் காட்சிப்படுத்தும் மாவட்ட கால்பந்து கழகம் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியையும் மெகா டிஜிட்டல் ஸ்கிரீனில் டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டத்துடன் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி மைதானத்தில் காட்சிப்படுத்தி வருகிறது.
மெகா திரையில் போட்டியை காண கால்பந்து ரசிகர்களும், விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் குடும்பத்துடன் வந்து கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்து கைதட்டி, விசில் அடித்து ஆரவாரத்துடன் போட்டியை கண்டு ரசித்தனர். இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தரராஜன் மாவட்ட செயலாளர் எஸ்.சண்முகம், ஈசாக்கு, தங்கத்துரை ஆகியோர் செய்து வருகின்றனர்.