food safety raid pt
தமிழ்நாடு

“கோவில் பிரசாதத்தில் இப்படி பண்ணலாமா?” தென்காசியில் ரெய்டு செய்து அபராதம் விதித்த அதிகாரிகள்!

கோவில் பிரசாத ஸ்டாலுக்கு ரெய்டு சென்ற அதிகாரிகள்.. கிலோ கணக்கில் தரமற்ற உணவுகள் பறிமுதல்.. அதற்காக பொருட்களை இப்படியா அழிப்பது என்று எழும் விமர்சனங்கள்.. முழு தகவலை பார்க்கலாம்!

PT WEB

தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே இருக்கும் மலை மீது திருமலைக்கோவில் என்ற பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவிலுக்கு வெளியே இருக்கும் அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசாத ஸ்டால், தனியாருக்கு குத்தகை விடப்பட்டுள்ளது.

இந்த கடையில் பிரசாதமாக புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவைகளும் விற்கப்பட்டு வருகின்றன. இந்த கடையில் தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள், விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வ நாகரத்தினம் தலைமையிலான அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது அங்கு 3 கிலோ பஞ்சாமிர்தம், 2 கிலோ மண்டவெல்லம், 1 கிலோ சிப்ஸ், 12 கிலோ அதிரசம் ஆகியவை தரமற்ற நிலையில் இருந்துள்ளது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 7,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அந்த பகுதியில் உணவு தயாரிக்கும் கூடம், சமையலறை உள்ளிட்டவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்திச் சென்றனர்.

இதற்கிடையே பறிமுதல் செய்த பொருட்களை சுகாதாரமற்ற முறையில், மலைக்கோவில் மேல் இருந்து கொட்டியதற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். "ரெய்டு சென்றதெல்லாம் சரிதான். ஆனால், சுகாதாரமான முறையில் அவற்றை அழித்திருக்கலாம்" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.