தமிழ்நாடு

புதுக்கோட்டை: பிரியாணி சாப்பிட்டு ஃபுட் பாய்சன்; 24 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை: பிரியாணி சாப்பிட்டு ஃபுட் பாய்சன்; 24 பேர் மருத்துவமனையில் அனுமதி

sharpana

பிரியாணி சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஏற்பட்டதால் 24 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகரில் நேற்று சித்திரவேல் என்பவரது வீட்டிற்கு கான்கிரீட் போடுவதற்காக பணி நடைபெற்றது. வேலையில் ஈடுபட்டவர்களுக்கு உணவை அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் இருக்கின்ற ஏ1 பிரியாணி சென்டரில், 40 பிரியாணி பொட்டலங்கள் பார்சலாக பெறப்பட்டு சித்திரவேல் கான்கிரீட் பணியில் இருந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

பிரியாணி சாப்பிட்ட பலருக்கும் இரவு முதல் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வாந்தி மயக்கம் ஏற்பட்டு காலை முதல் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காலையில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக இதுவரை 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில், கனிமொழி என்ற பெண்ணிற்கு அதிக வயிற்றுவலி ஏற்பட்டதன் காரணமாக மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அபி என்கின்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி , ஹரிஹர சுதன்,பார்த்தீபன் ஆகிய மூன்று பேர் நேற்று பிரியாணி சாப்பிட்ட நிலையில் இன்று காலை பொதுத் தேர்வுக்காக கிளம்பும்போது லேசான வயிற்று வலி இருந்துள்ளது. தொடர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது மயக்கம், வாந்தி வந்து உடல்நிலைக் குறைவு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பிரியாணி உணவகத்தைத் நேரில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன் குமார் உடனடியாக சம்பந்தப்பட்ட உணவகத்தில் சாம்பிள் எடுத்து கொண்டு உணவகத்திற்கு சீல் வைத்தார்.