விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி அமைந்துள்ள ஹோட்டல்களில் திடீர் சோதனையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கக்கூடிய ஹோட்டல்களில் சென்னை நோக்கி செல்லக்கூடிய அரசு பேருந்துகளில் வரக்கூடிய பயணிகள் உணவு சாப்பிட நிறுத்தப்படுகிறது. இந்த ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் மற்றும் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என்று ஓரிரு மாதங்களாக தொடர்ந்து பேருந்து பயணிகளால் புகார்கள் எழுப்பப்பட்டு வந்தது.
இதனை அடுத்து நள்ளிரவில் பத்துக்கு மேற்பட்ட விழுப்புரம் மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிலையம் அருகே இருக்கக்கூடிய சரவணபவன் ஹோட்டலில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அங்கு இருக்கக்கூடிய சமையலறைகள் மற்றும் தின்பண்டங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
அப்போது தேதி குறிப்பிடப்படாத தின்பண்டங்கள், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இலை போன்றவற்றை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனை எடுத்து ஹோட்டலில் இதுபோன்று மீண்டும் நடைபெற்றால் ஹோட்டலின் உரிமை ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.