சென்னையின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே அதிகப்படியான குளிர் நிலவி வருகிறது. சென்னையிலும் கடந்த மாதம் முதல் அதிகப்படியான குளிர் நிலவி வருகிறது. நண்பகல் வேளையிலும் கூட குளிரின் தாக்கம் விடுவதில்லை. சென்னையில் காலையில் நிலவும் அதிகப்படியான குளிரால் மக்கள் வெளியே வர சிரமப்படுகின்றனர். ஊட்டி போன்று சென்னை காணப்படுவதால், மக்கள் சுவட்டர் அணிந்தபடியே வெளியே வர வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதனிடையே சென்னையில் நிலவும் அதிகப்படியான பனியால் வாகன ஓட்டிகளும் அதிகளவில் சிரமப்படுகின்றனர். பனி காரணமான போதிய வெளிச்சம் இல்லாததால் எதிர்வரும் வாகனங்கள் சரியாக கண்ணுக்கு தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். நேற்றிரவு சென்னையில் சுமார் 21 டிகிரி வெப்பநிலையே பதிவானது. செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் விடிந்த பின்பும் கூட கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் அபாய எச்சரிக்கை விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு செல்கின்றன.