Election flying squad pt desk
தமிழ்நாடு

வாகன சோதனையில் சிக்கிய ரூ.30 லட்சம் பணம், 500 கிராம் தங்க நகைகள் - பறிமுதல் செய்த பறக்கும் படை!

ஓசூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 30,50,000 பணம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஐதராபாத்தில் இருந்து கோவை சென்ற சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 30 லட்சத்தி 50 ஆயிரம் பணம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Money and gold seized

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆபரண தங்க நகைகளை ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவையைச் சேர்ந்த நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் ஐதராபாத்தில் உள்ள தங்க நகை கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும் அதன் மூலம் பெறப்பட்ட பணம் மற்றும் மோதிரம், காதணிகள் மற்றும் சிறிய தங்க கட்டிகளை எடுத்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளை சார் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரியங்கா மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.