தமிழ்நாடு

ஒரு கிலோ இவ்வளவா? - கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகரித்துள்ள பூ விலை

ஒரு கிலோ இவ்வளவா? - கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகரித்துள்ள பூ விலை

webteam

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு ரூ.1800 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகிறது. 

பூக்களின் வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் மல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் மொத்த விற்பனை விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறார்கள் வியாபாரிகள். அதே நேரத்தில் முகூர்த்த நாள் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை காரணமாகவும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலையை பொருத்தமட்டில் மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.1800 முதல் ரூ.2000 வரையிலும், சாதிமல்லி கிலோ ரூ.600 முதல் ரூ.650 வரையிலும், முல்லை ரூ.900 முதல் ரூ.1000 வரையிலும், கனகாம்பரம் கிலோ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பன்னீர் ரோஜா கிலோ ரூ.120-க்கும், சாமந்தி ரூ.50 முதல் ரூ.80 வரை, சாக்லெட் ரோஸ் ரூ.160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போன்று பிச்சிப்பூ கிலோ ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையிலேயே பூக்களின் விலை அதிகமாக உள்ள நிலையில் சில்லறை விற்பனையில் பூக்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. வரவுள்ள நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கிறார்கள் கோயம்பேடு மலர் சந்தை வியாபாரிகள்.