தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது. நேற்றிரவு 8.30 மணி நிலவரப்படி சென்னை எண்ணூரில் 86.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாகையில் 90 மில்லி மீட்டரும், காரைக்காலில் 22 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை குன்றத்தூர் அருகேயுள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் 25 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்றைய நிலவரப்படி ஏரியில் நீர்மட்ட உயர்வில் 24 அடியில் 21.93 அடி இருந்தது. இன்றைய நிலவரப்படி 22.05 அடியும் நீர் கொள்ளளவும், நீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3645 அடியில், நேற்றைய நிலவரப்படி 3102 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. இன்று காலை நிலவரப்படி 3132 ஆக உயர்ந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மழைப்பொழிவு அதிகரிக்கும் சூழலில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கக்கூடும்.
வழக்கமாக 22 கன அடி நீர் உயரத்தை எட்டும்போது செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது வழக்கம். அந்தவகையில்தான் நேற்று நீரானது திறந்துவிடப்பட்ட சூழலில், தற்போது 24 அடியில் 22.05 அடி உயரத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.