தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி திமுக தொடர்ந்த வழக்கு: இன்று விசாரணை

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி திமுக தொடர்ந்த வழக்கு: இன்று விசாரணை

webteam

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவி‌டக் கோரி அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மனு அளித்தன. இதன் பின்னர், தங்களது மனு மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, திமுக எம்பிக்கள் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில், வித்யாசாகர் ராவிடம் கடந்த மாதம் 26ஆம் தேதி மீண்டும் ஒரு மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆளுநர் ஆணையிடுமாறு உத்தரவிடக்கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12ஆம் தேதி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது செப்டம்பர் 20ஆம் தேதி மற்றும் அக்டோபர் 4ஆம் தேதிகளில் நடைபெற்ற நிலையில், அடுத்த விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.