chennai rain pt desk
தமிழ்நாடு

சென்னையில் ஓய்ந்த மழை... ஏரிகளில் நீர் திறப்பால் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ளம்...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை ஓய்ந்தாலும் ஏரிகளில் நீர் திறப்பு மற்றும் உடைப்பு காரணமாக குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

webteam

மிக்ஜாம் புயல் காரணமாக ஒரு நாளுக்கும் மேலாக தொடர்ந்து பெய்த அதி கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி கிடுகிடுவென உயர்ந்தது. இதன் காரணமாக ஏரியில் இருந்து திறக்கும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, 8 ஆயிரம் கனஅடி உபரி திறக்கப்பட்டுள்ளதால் குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை தண்ணீரில் மூழ்கி 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Residence area

காஞ்சிபுரம் வரதராஜபுரம் ராயப்பா நகரில் அடையாறு ஆற்றின் கரை உடைந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதன் காரணமாக குடியிருப்புகளுக்கு உள்ளே பொதுமக்கள் முடங்கியுள்ளனர். நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பூவிருந்தவல்லி - பட்டாபிராம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள குடியிருப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் நடந்து சென்ற இரண்டு பேரை ஜேசிபி வாகனம் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட காவல் நிலையத்தை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் புகார்கள் அளிக்க பொதுமக்கள் வரமுடியாத சூழல் நிலவியது. இதன் காரணமாக காவல் நிலையம் எதிரே காவல்துறையினர் முகாம் அமைத்து பணிகளை மேற்கொண்டனர். பூவிருந்தவல்லி அனைத்தும் மகளிர் காவல் நிலையத்திலும் தண்ணீர் புகுந்தது. குமணன்சாவடி பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ளே அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் தண்ணீர் புகுந்ததால் காவலர்களின் குடும்பத்தினர் வீடுகளில் முடங்கினர்.

flood

இதனிடையே, பூவிருந்தவல்லியில் உள்ள பெரிய பள்ளி வாசலில் இருந்து இஸ்லாமிய மக்கள் அப்பகுதியில் உள்ள மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கி வருகின்றனர். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பள்ளி வாசலில் தங்கி கொள்ளவும் அழைப்பு விடுத்தனர். அதன்படி அங்கு 30க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்தனர். சென்னை போரூரை அடுத்த வானகரம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தாம்பரம் - மதுரவாயில் புறவழி சாலையில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.