தமிழ்நாடு

கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் -மின்சாரம் இல்லாததால் இளைஞர் மழைநீரில் குளித்த அவலம்

கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் -மின்சாரம் இல்லாததால் இளைஞர் மழைநீரில் குளித்த அவலம்

webteam

தரங்கம்பாடி அருகே கனமழை காரணமாக 70-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த மழைநீரில் இளைஞர் ஒருவர் சோப்பு போட்டு குளித்த அவலம் அரங்கேறியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாகவும் ஒரே நாளில் 18 சென்டிமீட்டர் மழை பெய்ததாலும் ஆக்கூர் உடையார்கோவில் பத்து கிராமத்தில் புத்தூர்ரோடு, சின்ன தெரு, பெரிய தெரு ஆகிய வீதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மழைநீரால் சூழ்ந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் வடிய வழியின்றி விளைநிலங்களில் புகுந்து சாலைகளை கடந்து காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள 70க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதில், பத்துக்கும் மேற்பட்ட கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. தண்ணீர் புகுந்த வீடுகளில் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இன்று மழை இல்லை என்றாலும் தண்ணீர் வடியாமல் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். கிராம மக்களுக்கு ஆக்கூர் அரசு பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

நேற்றிலிருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் தவித்துவந்த நிலையில், மாலை 6 மணி முதல் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சாரம் இன்றி, குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால் இளைஞர் ஒருவர் மழை வெள்ளநீரில் சோப்பு போட்டு குளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.