தமிழ்நாடு

மாயாற்றில் வெள்ளப் பெருக்கு: தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

மாயாற்றில் வெள்ளப் பெருக்கு: தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

webteam

கிளன்மார்கன் அணை திறக்கப்பட்ட நிலையில் மாயாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தப்ப காட்டில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முழுவதிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. ஊட்டி அருகே உள்ள கிளன்மார்கன் அணை நிரம்பிய நிலையில், நேற்று காலை முதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூடலூரில் பெய்த கனமழை காரணமாக முதுமலை வனப் பகுதி வழியாக ஓடக்கூடிய மாயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் கிளன்மார்கன் அணை திறக்கப்பட்டதால், அங்கிருந்து வெளியேறும் தண்ணீரும் மாயாற்றில் கலந்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் தெப்பக்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து தான் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும். அதேபோல கூடலூரில் இருந்து மசினகுடி பகுதியை இணைப்பதற்கு இந்த ஒரு தரைப்பாலம் மட்டுமே உள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக தரை பாலம் வழியாக மதியம் 1 மணி முதல் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கூடலூர் வழியாக ஊட்டிக்கு திருப்பி விடப்பட்டன. தற்போதைய நிலவரப்படி (இரவு 11.30) ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறையாத காரணத்தால் தரை பாலம் தண்ணீரில் மூழ்கியபடியே உள்ளது.

இதனால் கூடலூர் - மசினகுடி இடையே போக்குவரத்து தடை நீடிக்கிறது. பாலத்திற்கு மறுபுறம் உள்ள பழங்குடி இன மக்களும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். பாலத்திற்கு மறுபுறம் முதுமலை வளர்ப்பு யானை முகாம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.