தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உத்தமபாளையம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓடைகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து முல்லைப் பெரியாற்றில் வந்து சேர்ந்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், உத்தமபாளையம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
இதனிடையே 2 நாட்களுக்கு தேனி உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் உத்தமபாளைம் முல்லைப் பெரியாறு தடுப்பணையில் பொதுமக்கள் துணி துவைக்கவும், குளிக்கவும் காவல்துறையினர் தடை விதித்துள்ளது.
மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வெள்ளத்தில் யாரேனும் சிக்கினால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது