கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருவள்ளுர் மாவட்டத்தில் கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் லவா, குசா 2 ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்து சித்தூர் மாவட்டம் அம்மாபள்ளிஅணையிலிருந்து நேற்று முன்தினம் இரவு முதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மேலும் 200 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக்கோடு தாலுகாவில் உள்ள கரையோர கிராமங்களுக்கு திருத்தணி கோட்டாட்சியர் ஜெயராமன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஆற்றை கடக்கும் போது கவனமாக இருக்குமாறும் கூறியுள்ளார். இந்த நீர் வரத்தானது, சென்னைக்கு குடி நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி அணைக்கு செல்வதால், அதன் நீர் மட்டம் அதிகரிக்க வாய்பிருக்கிறது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.