தமிழ்நாடு

பொங்கிப் பெருக்கெடுத்து சீறிப்பாயும் காவிரி... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பொங்கிப் பெருக்கெடுத்து சீறிப்பாயும் காவிரி... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நிவேதா ஜெகராஜா

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றுக்குச் செல்வதை தவிர்க்குமாறு பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குடகில் தோன்றி தமிழகத்தில் பாயும் அகண்ட காவிரிக்கு தொட்டில் கட்டி வைத்துள்ளது மேட்டூர் அணை. தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ள மேட்டூர் அணையிலிருந்து மடை திறந்து பாய்ந்து வரும் காவிரியின் அழகைக் காண எத்தனை ஆயிரம் கண்கள் இருந்தாலும்போதாது என்பதற்கு இந்தப் பருந்துப் பார்வை காட்சிகள் ஒரு சான்று.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காரணமாக, மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதில் குறிப்பாக அணை மற்றும் சுரங்க மின்நிலையத்தின் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், மேட்டூர் அணையின் 16 கண் மதகின் வழியாக திறக்கப்படும் 1 லட்சத்து 17 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேறும் காட்சிகள் பார்ப்போரை கவர்ந்து வருகிரது.

இப்படியாக பொங்கிப்பெருக்கெடுத்து சீறிப்பாயும் காவிரி இரு கரைகளையும் தொட்டவாறே கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஆடிப்பெருக்கையொட்டி, காவிரியில் குளிக்கவும், செல்ஃபி எடுக்கவும் புகைப்படம் எடுக்கவும் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை மீறி பலரும் ஆற்றங்கரையில் செல்ஃபி மற்றும் வீடியோக்களை எடுத்து வருகிறார்கள்.

தஞ்சை கல்லணையிலிருந்து பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆறுகளில் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால், ஆறுகளுக்கு செல்லவும், செல்ஃபி எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரிநீரால், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குமாரபாளையம் இந்திராநகர், மணிமேகலை தெரு, கலைமகள் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. அப்பகுதியில் உள்ளவர்கள் வருவாய்த் துறையினர் மூலம் மீட்கப்பட்டு தனியார் மற்றும் நகராட்சி மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற மறுத்ததால் கோட்டாட்சியர் நேரில் வந்து அறிவுறுத்தினார்.

இதேபோல, பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் படுகையணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.