கடந்த வருடம் இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த அணை, ஏரி, குளங்கள் என்று அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு நிரம்பி வழிய தொடங்கியது. மேலும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் தாக்கம் பெரும் சேதத்தினையும் ஏற்படுத்தியது.
இந்தவகையில் தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை, அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. இதனால் வைகை அணையில் உள்ள 7 பிரதான மதகுகள் மூலம் 3,106 கன அடி நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது
இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அணையில் குளிக்கவும், இறங்கவும் வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வருடம் தாமதமாக நிரம்பிய வைகை அணை தற்போது மிக வேகமாக நிரம்பியதால் அணையை சுற்றியுள்ள 5 மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.