தமிழ்நாடு

பொன்னமராவதி அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: போட்டிபோட்டு மீன் பிடித்த மக்கள்

பொன்னமராவதி அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: போட்டிபோட்டு மீன் பிடித்த மக்கள்

kaleelrahman

பொன்னமராவதி அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்து மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் செவிலி கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் ஜாதி மதம் பாராமல் மீன்பிடித் திருவிழா நடைபெறும்.

இந்நிலையில் கொரோனா பெறுந்தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றியும் மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை. இதையடுத்து இன்று ஞாயிற்று கிழமை செவலூர் ஊராட்சியில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் செவலூர், மலையடிப்பட்டி, குழிபிறை, பனையப்பட்டி, ஆத்தூர், வீரராணாம்பட்டி, செம்பூதி, ஆலவயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர்.

இதைத்தொடர்ந்து பாரம்பரிய முறைபடி கண்மாயில் இறங்கிய பொதுமக்கள், ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளைக் கொண்டு லாவகமாக மீன்பிடிக்கத் தொடங்கினர். இதில், நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.