தமிழ்நாடு

மாசடைந்த குளத்தில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்... தொழிற்சாலை கழிவு நீர் காரணமா?

மாசடைந்த குளத்தில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்... தொழிற்சாலை கழிவு நீர் காரணமா?

webteam

விராலிமலை அம்மன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் பிரசித்தி பெற்ற பட்டமரத்தான் கோயிலும் அதன் அருகே சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான அம்மன் குளமும் உள்ளது. இக்குளம் மாதிரிப்பட்டி, கலிங்கிப்பட்டி, சின்னபழனிபட்டி ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த குளத்தை நம்பி கடந்த காலங்களில் சுமார் 200 ஏக்கர் வரையில் விவசாயம் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த குளத்தின் நீர் மாசடைந்து காணப்படுவதோடு கடந்த சில நாட்களாக அதில் இருந்த மீன்களும் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதால் குளத்திலும் தண்ணீர் பெருகிவரும் அதே வேளையில், விராலிமலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் எண்ணை கழிவுகளை தொழிற்சாலை நிர்வாகத்தினர் குளத்தில் ஊற்றிவிட்டுச் சென்றுவிடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இனியாவது மீன்கள் செத்ததற்கான காரணத்தை கண்டறிந்து பழமை வாய்ந்த இந்த குளத்தை மீண்டும் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விராலிமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வியிடம் கேட்டபோது, “ஏற்கனவே இதே போல் மீன்கள் இந்த குளத்தில் செத்து மிதந்த போது சம்பந்தப்பட்ட நீரை எடுத்து ஆய்வு செய்ததில் அதில் தொழிற்சாலை கழிவுகள் ஏதும் கலக்கவில்லை என்று தெரியவந்தது. தற்போது மீண்டும் இக்குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அதற்கான காரணத்தை கண்டறிய குளத்து நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். அது வந்த பிறகுதான் மீன்கள் செத்ததற்கான காரணம் தெரியும். இனிமேல் இது போன்ற நிலை நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்hர்.