கன்னியாகுமரி மீனவர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கன்னியாகுமரி| நடுக்கடலில் பழுதாகி நிற்கும் விசைப்படகு.. மீட்க கண்ணீரோடு கோரிக்கை வைக்கும் மீனவர்கள்!

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றபோது பழுதடைந்த விசைப்படகை மீட்டுத்தருமாறு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: மனு

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றபோது பழுதடைந்த விசைப்படகை மீட்டுத்தருமாறு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த, கணவரை இழந்த ஷீபா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு புறப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 11 ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இவர்கள், 15 ஆம் தேதி படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் நடுக்கடலில் தவித்துள்ளனர்.

எட்டாவது நாளில் அந்த வழியே வந்த வெளிநாட்டுக் கப்பலில் இருந்தவர்கள், 12 மீனவர்களையும் மீட்டு, இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், அவர்கள் சென்ற, 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விசைப்படகை மீட்காமல் நடக்கடலில் விட்டு விடும் நிலை ஏற்பட்டது.

நடுக்கடலில் தத்தளித்த 12 மீனவர்களும் கொச்சியில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நடுக்கடலில் கைவிடப்பட்ட தனது ஒரே ஒரு வாழ்வாதாரமான விசைப்படகை மீட்டுத் தருமாறு, அதன் உரிமையாளர் ஷீபா, மத்திய - மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசைப்படகை மீட்கும் கோரிக்கையுடன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம், இரவிபுத்தன்துறை மீனவர்கள் நேரில் மனு அளித்துள்ளனர். ஷீபாவின் கண்ணீரைத் துடைக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.