தமிழ்நாடு

இலங்கை ரோந்து கப்பல் மோதி மீனவர் உயிரிழப்பு - சடலத்தை மீட்டுத்தர மீனவர்கள் போராட்டம்

இலங்கை ரோந்து கப்பல் மோதி மீனவர் உயிரிழப்பு - சடலத்தை மீட்டுத்தர மீனவர்கள் போராட்டம்

kaleelrahman

இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர் உயிரிழந்ததை கண்டித்தும், உயிரிழந்த மீனவரின் சடலத்தை தமிழகத்திற்கு எடுத்து வரக் கோரியும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18 ஆம் தேதி ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்களை கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால், இலங்கை கடற்படையினருக்கு அஞ்சி மீனவர்கள் கரை திரும்ப முயன்றபோது, ரோந்துக் கப்பல் மோதியதில், மீனவர்களின் மீன்பிடிப் படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளது. அதில் இருந்த சுகந்தன், சேவியர் ஆகிய இரு மீனவர்களை மீட்டு இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், மாயமான மீனவரின் உடல் நெடுந்தீவு அருகே கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மீனவர்கள், கோட்டைப்பட்டினத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்த போதும், அதை ஏற்க மறுத்து மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

உயிரிழந்த மீனவரின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும் என்றும், கைதான இரு மீனவர்களும் நலமான இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ராஜ்கிரணின் உடல் சொந்த ஊருக்கு வந்து சேரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.