தமிழ்நாடு

"கடலில் சாலையே இல்லாதபோது சாலை வரி, பசுமை வரி எதற்கு?" - மீனவர்கள் போராட்டம்

"கடலில் சாலையே இல்லாதபோது சாலை வரி, பசுமை வரி எதற்கு?" - மீனவர்கள் போராட்டம்

Sinekadhara

கடலில் சாலையே இல்லாதபோது மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கான‌‌‌ டீசல் விலையில் சாலை வரி, பசுமை வரி விதிப்பது ஏன் என கேள்வி எழுப்பி கன்னியாகுமரியில் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் ஒன்றிணைந்த விசைப்படகு மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடலில் பசுமை பூங்காவோ, சாலையோ இல்லாதபோது விசைப்படகுக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் சாலை வரி என்ற பெயரில் 18 ரூபாயும், பசுமை வரியாக 3 ரூபாயும் விதிப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.

டீசல் விலை உயர்வுக்கு ஏற்றாற்போல் படகு வாடகை உயரும் நிலையில், மீன்விலை ஏன் உயர்த்தப்படுவதில்லை எனவும் மீனவர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டு வருகின்றன.

கடைநிலை கூலித் தொழிலாளி முதல் அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை பரப்புரையில் ஈடுபடும் அரசியல் கட்சி தலைவர்களிடம் முன் வைப்பதோடு, தங்கள் கோரிக்கைகள் நிறைவேற சில போராட்டங்களையும் செய்து வருகின்றனர். அந்தவகையில் சற்று வித்தியாசமாக கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நடத்திய போராட்டம் கவனம் ஈர்த்தது.

"கடலிலேயே இல்லையாம் ஜாமீன்" என்ற வடிவேல் காமெடி போல கடலிலேயே இல்லாத சாலைக்கு சாலை வரி என கேள்வி எழுப்பி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசைப்படகுகளுக்கு பயன்படுத்தப்படும் டீசல் ஒவ்வொரு லிட்டருக்கும் சாலை வரி என்ற பெயரில் 18 ரூபாயும், பசுமை வரி 3 ரூபாயும் என லிட்டருக்கு 21 ரூபாய் அரசு வசூலித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

கடலில் இல்லாத சாலைக்கு விசைப்படகு மீனவர்களிடம் டீசலில் சாலை வரி, பசுமை வரி விதிப்பது நியாயமா என கேள்வி எழுப்பி மீனவர்கள் போராடியது அனைத்து அரசியல் கட்சியினரையும் கவனிக்க வைத்தது.