தமிழ்நாடு

வாயு புயல் எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

webteam

அரபிக்கடலில் உருவாகியிருக்கும் "வாயு" புயல் காரணமாக, மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் மும்பைக்கு தென்மேற்கில் 680 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறும் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது. பின்னர் வடக்கு நோக்கி நகரும் வாயு புயல், குஜராத்தின் போர்பந்தர் அருகே 135 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை கரையைக் கடக்கும் என்று ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது. 

எனவே, மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. வாயு புயல் காரணமாக, கர்நாடகா,கேரளா மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கூறியுள்ளது. மேலும், அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு சூட்டப்பட்டிருக்கும் வாயு என்ற பெயர், சுழற்சி முறையில் இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் ஆகும்.