எண்ணூர் எண்ணெய் கழிவு புதிய தலைமுறை
தமிழ்நாடு

எண்ணெய் கழிவுகள்: எண்ணூர் பகுதியில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு.

PT WEB

மிக்ஜாம் புயலின்போது சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள் எண்ணூரை ஒட்டிய கடல் பகுதியிலும் கொசஸ்தலை ஆற்றிலும் கலந்தது. கடலில் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பில் எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள நிலையில் இதனால் மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் எண்ணெய் பரவியுள்ள பகுதியில் தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். காட்டுக்குப்பம், சின்னக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் 7 குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடலில் படர்ந்துள்ள எண்ணெய் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடந்த 10 நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.

முன்னதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் கடலோர காவல்படை அதிகாரிகளும் கடலில் படர்ந்துள்ள எண்ணெய் குறித்து ஆய்வு நடத்தியிருந்தனர்.

கழிவு எண்ணெயை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தரவும் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.