தமிழ்நாடு

முதலுதவிப் பெட்டிகள் இல்லாத பேருந்துகள்?: புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்

முதலுதவிப் பெட்டிகள் இல்லாத பேருந்துகள்?: புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்

Rasus

கோவை மாவட்டத்திற்குட்பட்ட அரசு பேருந்துகளில் நான்காயிரத்திற்கும் அதிகமான முதலுதவிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் பல பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகளே இல்லாதது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலளிக்கக் கோரி இருந்தார் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டேனியல். இதற்கு பதிலளித்த போக்குவரத்துக் கழகம், 67 லட்சத்து 54 ஆயிரத்து 100 ரூபாய் செலவில், நான்காயிரத்து அறுநூற்று ஐம்பத்து எட்டு முதலுதவிப் பெட்டிகள் வாங்கிப் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. ஆனால் பல பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் வைக்கப்பட‌வில்லை என டேனியல் குறை கூறியிருந்தார்.

இது தொடர்பாக புதிய தலைமுறையும் கள ஆய்வு மேற்கொண்டது. அதிலும்,பல பேருந்துகளில் முதலுத‌விப் பெட்டிகள் இல்லாத நிலை இருப்பது தெரிய வந்தது.

எனவே, போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளபடி வாங்கிய முதலுதவிப் பெட்டிகள் என்ன ஆனது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டு‌ம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.