தமிழ்நாடு

கொட்டும் மழையில் பிறந்து 4 நாட்களே ஆன 2 குழந்தைகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Sinekadhara

புளியந்தோப்பு அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களான 2 குழந்தைகளை செம்பியம் தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதி கன மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உதவிகள்கூட கிடைக்காமல் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில், வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி இருப்பவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் பணியில் தீயணைப்புத்துறையினர் 24 மணிநேரமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள அரசு தாய்- சேய் நல மருத்துவமனையில் பிறந்த 4 நாட்களான 2 குழந்தைகளின் பெற்றோர்கள் வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தனர். அந்த சாலை முழுவதும் மழை தண்ணீர் தேங்கி இருந்ததால் குழந்தையுடன் செல்லமுடியவில்லை. இது தொடர்பாக தகவலறிந்த செம்பியம் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வன் தலைமையிலான மீட்புக்குழுவினர் படகு மூலம் அங்கு விரைந்து சென்றனர்.

பிறந்து 4 நாட்களே ஆன 2 குழந்தைகளையும் அவர்களது தாயார்களையும் கொட்டும் மழையில் படகுமூலம் குடை பிடித்தபடி பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர், அவர்களது வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனைக்கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினரை பாராட்டினர்.

இது தொடர்பாக செம்பியம் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வன் கூறுகையில், "பிறந்த குழந்தைகளையும் அவர்களது தாயார்களையும் மீட்டுள்ளோம். புளியந்தோப்பு பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் அதனை வெளியேற்றி வருகிறோம். வயதானவர்கள் வீடுகளுக்குள் இருப்பவர்களை மீட்டு வருகிறோம். மழை காலத்திலும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. மின்சாரம் பயன்படுத்தும்போது கவனமாக கையாள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.