தமிழ்நாடு

முதல்வரை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் கருத்து வெளியிட்டு வந்த தீயணைப்பு வீரருக்கு வலை

முதல்வரை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் கருத்து வெளியிட்டு வந்த தீயணைப்பு வீரருக்கு வலை

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தமிழக முதல்வர் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றிய தக்கலை தீயணைப்பு வீரர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஹெரால்ட் (43). இவர், தக்கலை தீயணைப்புத் துறையில் முன்னணி தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த 15-நாட்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்தார்.

இந்நிலையில், அவர், தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வலைதளங்களில் பல பதிவுகளை பதிவேற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவர் நேற்று முன்தினம் மீண்டும் தக்கலை தீயணைப்பு காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்தார். இதையடுத்து நேற்று அவரது முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை ஆபாசமாகவும் அதன் அருகே அமைச்சர் துரைமுருகன் நிற்பது போன்றும் சித்தரித்து பதிவேற்றியுள்ளார்

இதை முகநூலில் பார்த்த தக்கலை தி.மு.க வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் ஜெகதேவ் முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றி களங்கம் விளைவித்த தக்கலை தீயணைப்புத் துறை ஊழியர் ஹெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஹெரால்ட் மீது 505 IPC & 67 IT ACT பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருகின்றனர் .அரசு பணியில் இருக்கும் ஒருவர் பொறுப்பை மறந்து முதல்வர் மற்றும் அமைச்சரின் படத்தை ஆபாசமாக பதிவேற்றி வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.