வெடித்துச் சிதறிய பட்டாசுகள் jp;t desk
தமிழ்நாடு

திண்டுக்கல் | சிறுவர்களின் ஆர்வத்தால் வெடித்துச் சிதறிய பட்டாசுகள் - போராடி தீயை அணைத்த வீரர்கள்!

நத்தம் அருகே வெடி வெடிக்கும் ஆர்வத்தில் ஊதுபத்தியை பட்டாசு இருந்த அறையில் வைத்துவிட்டுச் சென்ற சிறுவர்கள் - வெடித்துச் சிதறிய பட்டாசுகளால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பட்டாசு வகைகளை வாங்கி வந்து அவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள பொருட்கள் வைப்பறையில் வைத்திருந்தார். இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு அவரது மகன்கள் பட்டாசு உள்ள அறையில் இருந்து பட்டாசுகளை எடுத்து வெடித்துள்ளனர்.

வெடித்துச் சிதறிய பட்டாசுகள்

அப்போது பட்டாசு தீர்ந்ததால் மீண்டும் எடுக்கச் சென்ற சிறுவர்கள் பட்டாசு வைத்திருந்த அறையில் பட்டாசுகளை எடுத்துவிட்டு கையில் வைத்திருந்த எரிந்த நிலையில் இருந்த ஊதுபத்தியை அந்த அறையிலேயே வைத்து விட்டு வந்து விட்டனர். சிறிது நேரத்தில் ஊதுபத்தியில் இருந்து பரவிய தீ காரணமாக பட்டாசு வெடித்து சிதற ஆரம்பித்தது. இதனால் அந்த அறையில் இருந்து புகை வெளியேறுவதை கண்ட மணிகண்டன் தீயை அணைக்க முயன்றுள்ளார்.

ஆனால், பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.