தமிழ்நாடு

பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய குழந்தை... இன்னொரு சிறுவனை இறக்கி காப்பாற்றிய தீயணைப்புத்துறை

நிவேதா ஜெகராஜா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வீட்டின் உட்பகுதியில் தாழிட்ட இரண்டு வயது குழந்தையை லாவகரமாக மீட்டுள்ளனர் ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் விளையாட்டு மைதானத்தின் எதிரே உள்ள கவர்னர் தோப்பு பகுதியில் வசித்து வரும் ரமேஷ் மற்றும் பவித்ரா என்பவரின் 2 வயது குழந்தை வீட்டின் உட்பகுதியில் தாழிட்டு சிக்கிக் கொண்டது. குழந்தையை மீட்பதற்காக அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ பகுதியில் வீட்டின் கதவை உடைக்க முற்பட்டபோது பயனளிக்கவில்லை.

குழந்தையின் அலறல் சத்தமும் அதிகமாக இருந்தது. மேலும் ஜன்னல் கம்பியை உடைத்து தீயணைப்பு காவல்துறையினர் இறங்கும்பொழுது போதுமான இடைவெளி கிடைக்கவில்லை. இதனால் மற்றொரு கம்பியையும் உடைத்து, அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சிறுவனை அழைத்து, அச்சிறுவனை கம்பி இடைவெளி வழியாக உள்ளே இறங்கி காப்பாற்றியுள்ளனர்.

ஜன்னல் கம்பி வழியாக அனுப்பப்பட்ட அச்சிறுவன், கதவின் உட்பக்கத் தாழ்ப்பாளை திறந்தான். இதில் சந்தோஷத்தில் உறைந்த பெற்றோர் குழந்தையை ஆரத்தழுவி முத்தமிட்டு கொஞ்சினார்கள். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.