தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடுகள்

தமிழகத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடுகள்

webteam

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மாணவி உள்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் இதற்கு முன் காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழக வரலாற்றில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் அதிகம் பேர் பலியா‌னது தூத்துக்குடியில் தான். 1970-லிருந்து 1993-ம் ஆண்டு வரை காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஏறத்தாழ 48 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் ஆவர்.1980-களில் நாராயண‌சாமி நாயுடு தலைமையில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. வேடசந்தூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பல்வேறு காலக்கட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.அதே ஆண்டு டிசம்பர் 31ம் தேதி குருஞ்சாக்குளத்தில் நடைபெற்ற விவசாய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். இதுவே காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அதிகபட்ச பலி எண்ணிக்கையாக இருந்தது.

இதேகாலக்கட்டத்தில் அருப்புக்கோட்டை அருகே வாகைகுளம் கிராமத்தில் ராட்சத ஆழ்கிணறு தோண்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்‌. அவர்களை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். இதன்பின்னர் சென்னையில் 1985-ம் ஆண்டு மீனவர்கள் நடத்திய போராட்டத்தில் நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 மீனவர்கள் உயிரிழந்தனர்.

2011ம் ஆண்டு பரமக்குடியில் ‌இமானுவேல் சேகரன் நினைவுநாள் குருபூஜையையொட்டி அவரது நினைவிடத்திற்கு வந்தவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்‌தனர். இதுதான் தமிழகத்தில் காவல்துறையினர் நடத்திய கடைசி துப்பாக்கிச்சூடு நிகழ்வாக இருந்தது. தனி‌யார் ஒருவரால் நடத்தப்படும் ஒரு ஆலையை அகற்ற ‌ஒரு மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது இதுவே‌ முதல்முறையாகும். இதேபோல், தமிழக அரசியல் வரலாற்றில் காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் அதிக பேர் பலிகொண்ட சம்பவமாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அமைந்துள்ளது.