தமிழ்நாடு

ஓரகடம்: சிலிண்டர் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து - குடியிருப்புகளுக்கும் பரவிய தீ!

ஓரகடம்: சிலிண்டர் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து - குடியிருப்புகளுக்கும் பரவிய தீ!

webteam

ஒரகடம் அருகில் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் சிலிண்டர் சேமிப்பு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று மாலை பலத்த சத்தத்துடன் வெடித்து தீ பரவி உள்ளது. சிலிண்டர் குடோனுக்குள்ளே இருந்து பரவிய தீ மளமளவென குடோனுக்கு வெளியேவும் பற்றி எரியத் தொடங்கியது.

இதனால் குடோன் அருகே இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவியது. சம்பவம் நடைபெற்ற போது 10 ஊழியர்கள் குடோனுக்குள்ளே இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ சுற்றி இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதால், அப்பகுதியில் இருந்த, பொதுமக்களும் பலத்த காயமடைந்தனர்.

இந்த தீ விபத்தில் பெண் மற்றும் ஒரு சிறுவன் உட்பட இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த ஏழு தீயணைப்பு வாகனங்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர் மின்சார மூலம் தீ பரவக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து இந்த கிராமம் உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ,ஜீவா 50, பூஜா 22, நிவேதா 24, 12 வயது சிறுவன், சந்தியா 20, வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் என இதுவரை தீ விபத்தில் காயம் அடைந்தவர்களின் 7 பேர் பட்டியல் வெளியாகியுள்ளது.