தமிழ்நாடு

சென்னை தி.நகரில் தீ விபத்து: அபாயகரமான பகுதி என அறிவிப்பு

சென்னை தி.நகரில் தீ விபத்து: அபாயகரமான பகுதி என அறிவிப்பு

Rasus

சென்னை தி.நகரில் தீ விபத்து ஏற்பட்டுள்ள "சென்னை சில்க்ஸ்" அமைந்துள்ள இடம் அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பெரும் தீ விபத்து இன்று காலை ஏற்பட்டது. கடைக்குள் 10பேர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காலை 4.45 மணியிலிருந்து துணிக்கடைக்குள் எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், தரைத்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறி வருவதால் தீயை அணைப்பதில் சிரமம் நீடிக்கிறது. இதையடுத்து புகையை கட்டுப்படுத்தும் நவீன கருவி மூலம் தீயணைப்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அதிகளவிலான புகை வெளிப்படுவதும் குறுகிய சாலையில் கடை அமைந்திருப்‌பதும் தீயை அணைக்க முடியாததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. அதிகமான தீயணைப்பு வாகனங்களை நி‌றுத்த முடியாத சூழல் உள்ளதால் தீயை அணைக்க ஹைட்ராலிக் வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள "சென்னை சில்க்ஸ்" அமைந்துள்ள இடம் அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் துணிகள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.