தமிழ்நாடு

கார்ட்டூனிஸ்ட் பாலா மீது மீண்டும் வழக்கு... பத்திரிக்கையாளர் சங்கத்தினர் மீதும் எஃப்ஐஆர்

rajakannan

கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாகவும், அந்த பேனரில் சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரம் இடம்பெற்றிருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்க நிர்வாகிகள் பாரதி தமிழன், அசதுல்லா ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேனி போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசை விமர்சித்து கார்ட்டூனிஸ்ட் பாலா கேலிச் சித்திரம் ஒன்றினை தனது முகநூல் பதிவில் வெளியிட்டார். இந்த கேலி சித்திரம் முதலமைச்சர், நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறை டிஎஸ்பி ஆகியோரை விமர்சிக்கும் வகையில் இருந்தது. 

இந்த கேலிச் சித்திரத்தை எதிர்த்து கார்ட்டூனிஸ்ட் பாலா மீது நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நெல்லை மாவட்டத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாலாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார். இந்த நிலையில் மீண்டும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.