தமிழ்நாடு

தமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை?

தமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை?

Rasus

மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின்படி விதிக்கப்படும் அபராதத் தொகை வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த அபராதத்தை குறைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காகவும், வாகன விபத்துகளை குறைப்பதற்காகவும் அதிக அபராதத்தை விதித்து புதிய வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி விதிக்கப்படும் அபராதத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அபராதத் தொகையை அந்தந்த மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குள் திருத்திக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதையடுத்து பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அபராதத் தொகை பாதியாக குறைக்கப்பட்டது. இதேபோன்று உத்தரகாண்ட், உத்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களும் அபராதத் தொகையை குறைத்து உத்தரவிட்டன. மேலும் மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவைத்தன.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்கிழமை அபராதத் தொகையை குறைத்து புதிய அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விரைவில் அபராதத் தொகை குறைக்கப்படும் என்றும், குறைக்கப்பட்ட அபராதத் தொகை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.