திருப்பூரில் அருகே உறவினர் திருமணத்திற்கு வந்த பைனான்ஸியரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் அத்தப்பன் பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவர் 20 ஆண்டுகளாக கோவை காந்திபுரம் பகுதியில் குடும்பத்தோடு குடியிருந்துகொண்டு, பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். நேற்று மாலை பிச்சைமுத்து வாடகை காரில் அவரது சொந்த ஊரான அத்தப்பன் பட்டிக்கு சென்று விட்டு, இரவு தாராபுரம் அடுத்த மூலனூரில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கிருந்து மீண்டும் கோவைக்கு செல்ல புறப்பட்டுள்ளார். அப்போது பிச்சை முத்துவின் உறவினரான அத்தப்பன் பட்டியை சேர்ந்த குப்புச்சாமி என்பவர் தன்னை தாராபுரத்தில் இறக்கி விடும்படி கூறி காரில் ஏறியுள்ளார்.
மூலனூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த காரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல், சென்னாக்கல்பாளையம் பிரிவு என்ற இடத்தில் காரை வழிமறித்துள்ளது. அத்துடன் கார் ஓட்டுனர் செந்தில்குமார், குப்புச்சாமி ஆகியோரை மிரட்டி விட்டு பைனான்ஸ் அதிபர் பிச்சைமுத்துவை அவரது காரிலேயே அந்த கும்பல் கடத்தி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஒட்டுனர் செந்தில், பிச்சைமுத்துவின் மனைவி கமலம் மற்றும் திருமண வீட்டில் இருந்த பிச்சைமுத்துவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலையடுத்து மூலனூர் காவல்நிலையத்திற்கு வந்த பிச்சைமுத்துவின் மனைவி கமலம், மர்ம கும்பலால் கடத்தபட்ட தனது கணவரை உயிருடன் மீட்டுதரும்படி புகார் அளித்துள்ளார்.
புகாரைத் தொடர்ந்து, மூலனூர் காவல்துறையினர் பிச்சைமுத்துவை கடத்திய கும்பல் யார் என்றும், அவர் கடத்தபட்டது முன் விரோதம் காரணமாகவா? இல்லை தொழில் போட்டியின் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.