தமிழ்நாடு

அன்புச்செழியனின் ஆவணங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைப்பு

அன்புச்செழியனின் ஆவணங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைப்பு

Rasus

அன்புச்செழியனின் தி.நகர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தடயவியல் துறைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

நடிகர் சசிகுமாரின் உறவினர் மற்றும் அவரது நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வந்த அசோக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அசோக்குமார் எழுதி வைத்த கடிதத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்தான் தற்கொலைக்கு காரணம் என எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே காவல்துறையினர் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். இருப்பினும் அவரை பிடிப்பதற்காக 3 தனிப்படை அமைத்துள்ள போலீசார், அன்புச்செழியன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும் அன்புச்செழியன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக அவரின் நண்பரான முத்துக்குமாரை பிடித்து விசாரித்த போலீசார், நேற்று சென்னை தி.நகரில் உள்ள அன்புச்செழியன் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். கந்துவட்டி தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அப்போது அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் ஹார்டுடிஸ்க், 2 டைரிகள் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அன்புச்செழியனின் தி.நகர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சோதனைக்காக தடயவியல் துறைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.