தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு முன் உள்ள நிதிச்சிக்கல்கள் & சவால்கள்..!

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு முன் உள்ள நிதிச்சிக்கல்கள் & சவால்கள்..!

Veeramani

தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அமைய உள்ள அரசு பெரும் நிதிச்சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது என்பது அடுத்து பொறுப்பேற்க உள்ள அரசிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் எனக் கருதப்படுகிறது. முழு முடக்கம் இல்லாமல் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த முயலும் போது பொதுமக்களுக்குத் தேவையான நிதி உதவியை வழங்க அரசு கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும் எனக் கூறும் நிபுணர்கள், தேர்தல் நேரத்தில் அதிமுக மற்றும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மொத்த மாநில உற்பத்தியில் நான்கு அல்லது ஐந்து விழுக்காட்டை கூடுதலாக செலவிட வேண்டி இருக்கும் என்கின்றனர். கொரோனா நெருக்கடியால் அரசிற்கு வருவாய் இழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களும் ஜிஎஸ்டி வருவாயை தவிர்த்து, பெரும்பாலும் மது மற்றும் எரிபொருள் விற்பனை வருவாயை அதிகம் நம்பியுள்ளன. தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக வழங்கி உள்ளது. ஒருவேளை அக்கட்சிக்கு ஆட்சிக்கு வரும் நிலையில், இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.

அரசிற்கான வருவாய் என்பது அதிகரிக்க வாய்ப்பில்லாத நிலையில், அடுத்து பொறுப்பு ஏற்க இருக்கும் அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை அமல்படுத்துவதற்கு கூடுதல் செலவிட வேண்டியதிருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை அமல்படுத்த வரிவருவாயை செலவிடுதல் அவசியம் என்று கூறும் பொருளாதார நிபுணர்கள், அதை விடுத்து கடன் தள்ளுபடி போன்றவற்றிற்கு செலவிட்டால் அது மக்களுக்கு நன்மை பயக்காது என்றும் கூறுகின்றனர்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. என்கிறார் அய்யன் திருவள்ளுவர். ஆம், பொருள் வரும் முறையான வழிகளை உருவாக்குதலும், அதன் மூலம் வருவாயைப் பெருக்குவதோடு, அதனைக் காத்து மக்களுக்குப் பயன்தரும் வகையில் செலவிடுவதும் நல் அரசின் கடமை. இதை அடுத்து பொறுப்பேற்கும் அரசு உணர்ந்து செயல்படுதல் அவசியம்.

- சிவக்குமார்