தமிழ்நாடு

நிதி நிறுவன மோசடி வழக்கு: ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனருக்கு ஜாமீன் மறுப்பு

நிதி நிறுவன மோசடி வழக்கு: ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனருக்கு ஜாமீன் மறுப்பு

webteam


அதிக வட்டி தருவதாக பொது மக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனரின் ஜாமீனை மறுத்து, நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' என்ற நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த குற்றச்சாட்டி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நிறுவன இயக்குனர்கள் எட்டு பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து நிறுவன இயக்குனர்கள் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரணை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஜாமீன் கோரி நிறுவன இயக்குனர் பட்டாபிராம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சிறப்பு நீதிபதி ஜி.கருணாநிதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில், முதலீட்டாளர்களிடம் 2,425 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோதமாக பணம் வசூலித்ததில் மனுதாரருக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும், விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை எனவும், 1,08,908 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இயக்குனர் பட்டாபிராமின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.