தமிழ்நாடு

”அவர் ஒரு குட்டி எம்ஜிஆர், கொடை வள்ளல்”.. மயில்சாமி மறைவிற்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!

”அவர் ஒரு குட்டி எம்ஜிஆர், கொடை வள்ளல்”.. மயில்சாமி மறைவிற்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!

webteam

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி தன்னுடைய 57 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். மயில்சாமி மறைவிற்கு திரை நடிகர்கள், தயாரிப்பாளர்கள் முதலிய அனைத்து திரைத்துறையினரும் அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.

நடிகர் மயில்சாமிக்கு, இன்று அதிகாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மறைந்த திரைக்கலைஞர் மயில்சாமிக்கு, திரைத்துறையைச்சேர்ந்த பலரும் அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்:

”நண்பர் மயில்சாமி மறைவு மிகப்பெரிய சொல்ல முடியாத ஒரு துக்கம். நடிகராக இல்லை அனைவரிடமும் அவர் நண்பராக இருப்பார். மனம் இருந்தால் போதும், இவர் 10 ஆயிரம் சம்பாதித்தால் அதில் 2000 மற்றவருக்கு தான் உதவுவார். எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர், நான் ஆசையாக வளர்த்த இரண்டு பறவைகள் அவரிடம் தான் இருக்கிறது. அந்தளவிற்கு எங்கள் நட்பு நெருக்கமானது. காங்கேயம் காளை படத்தில் நாங்கள் அறிமுகமாகி, அந்த படம் நின்று விட்டாலும் எங்கள் நட்பு அங்கு அறிமுகமாகி இன்று வரையிலும் தொடர்கிறது” என்று கூறினார்.

பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி:

”திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், சாதாரண தொழிலாளியாக இருக்கும் அனைவரிடமும் நண்பனாக பழகக் கூடியவர் மயில்சாமி. இந்த வருடம் இவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. நேற்று கூட அவர் ஒரு படத்திற்காக டப்பிங் பேசியிருந்தார். இவருடைய திடீர் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்றார்.

நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா:

”சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே எனக்கு அவர் நண்பர். கன்னி ராசி படத்தில் தான் அவருக்கும் எனக்கும் பழக்கம் அதிகமானது. அவர் வசிக்கும் இந்த பகுதியில் மழை வெள்ள காலத்திலும் கொரோனா காலக்கட்டத்திலும் அதிக உதவிகளை செய்துள்ளார். நடிகர் விவேக்கை தொடர்ந்து இன்று நண்பர் மயில்சாமி, இப்படி அனைத்து நல்லவர்களும் நம்ப முடியாத அளவிற்கு விரைவில் இறந்து விடுகிறார்கள். இனி யாராலும் அவரது நண்பர் என்ற இடத்தை நிரப்ப முடியாது, அவரது இழப்பையும் தாங்க முடியவில்லை” என்றார்.

போண்டா மணி:

”மயில்சாமி ஒரு குட்டி எம்ஜிஆர், கொடை வள்ளல். நம்ம எல்லோரையும் விட்டு போய்ட்டார் மனுசன். நான் சீரியஸாக மருத்துவமனையில் இருந்தபோது, ஓடிவந்து 1 லட்ச ரூபாயா கைல கொடுத்து, கவல படாத எல்லார்கிட்டயும் சொல்லி பணம் கலெக்ட் பண்ணிருக்கன், எஸ்ஆர்எம்-ல பேசியிருக்கன், உன் ஆப்ரேசனுக்கு நான் பொறுப்புனு சொன்னார். அடுத்த வாரம் எனக்கு ஆப்ரேஷன், அதுக்குள்ள இந்த புன்னியவான் இப்படி விட்டுட்டு போய்ட்டாரு. நான் எத்தனையோ கலைஞர்களை பார்த்துள்ளேன், ஆனால் மயில்சாமி போல் ஒரு கலைஞனை பார்த்ததில்லை. அவர் ஆத்மா சாந்தியடையனும், இதற்கு மேல என்னால் பேசமுடியல” என கண்ணீர் சிந்தினார் போண்டா மணி.

நடிகர் சாமி:

”மயில்சாமியோட ஆத்மா நிச்சயமா சாந்தியடையும். அவர் ஒரு மிகப்பெரிய சிவபக்தர். கைல எவ்வளவு காசு இருந்தாலும், அதிலிருந்து அனைவருக்கும் உதவக்கூடிய நல்ல மனுசன். மனசுல எந்தவிதமான சிறு கவலையையும் வைச்சுக்காம எப்போதும் கலகலனு சிரித்துகொண்டே எல்லோரிடமும் இருப்பார். எப்படிங்க உங்களால முடியுது என்று கேட்டால், வாழ்க்கைல சந்தோசமா இருக்கனும் சாமி, சிரிச்சிக்கிட்டே இருக்கனும் சாமினு சொல்லுவார். இவ்வளவு சீக்கிரமா அவருக்கு சாவு வந்திருக்க கூடாது. ஒரு நல்ல நண்பரை இழந்துட்டோம்” என கண்ணீர் சிந்தினார்.

நடிகர் தாமு:

”நல்ல நண்பனை இழந்து விட்டோம். கலைத்துறை ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டது. எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே இருப்பார், மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் அவர் வரவில்லை. ஆனால் யார் எதைக் கேட்டாலும் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவரது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கடவுள்தான் ஆறுதல் கூற வேண்டும்” என்றார்.

நடிகர் சங்க தலைவர் நாசர்:

”என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவருடைய மரணம் ரொம்ப ரொம்ப பெரிய அதிர்ச்சியாக உள்ளது. சிறுவயதில் இறந்து விட்டார், சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர். தனது தகுதிக்கு மீறி பல உதவிகளை செய்துள்ளார் எனது இயக்கத்தில் நடித்துள்ளார். தப்பு என்று ஒன்று நடந்து விட்டால், எங்களது சங்கமாக இருந்தாலும் சரி, கட்சியாக இருந்தாலும் சரி நேரடியாக சொல்பவர். அவருடைய இடத்தை யார் நிரப்புவார்கள் என்பது தெரியவில்லை. அவரது குழந்தைகள் மிக சிறிய வயதில் உள்ளனர். அவருடைய ஸ்தானத்திலிருந்து கடவுள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்” என்றார்.

பாடகியும் நடிகையான கிரேஸ் கருணாஸ்:

”மயில்சாமி அண்ணன் எங்கள் குடும்ப நண்பர். விருகம்பாக்கம் மக்கள், இவரின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இங்கே, ஒவ்வொரு மழை வெள்ளத்தின்போதும், அவர் மக்களுக்கு அவ்வளவு உதவினார்” என்றார்.

தயாரிப்பாளர் சிவா:

”மயில்சாமி போன்ற ஒரு நல்ல மனிதனையும் நடிகனையும் ஒன்றாய்ப் பார்ப்பது மிகக் கடினம். அடுத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பார். படப்பிடிப்புத் தளத்தில் நண்பர்களுக்கு சமைத்துக் கொடுத்து பசியாற்றுவார். மிகப்பெரிய மனிதாபிமானி!” என்றார்.

விஜய் சேதுபதி:

“பலமுறை அவரது வீட்டிற்கு அழைத்திருக்கிறார். இந்த நிலையில் வரவேண்டியிருக்கும் என நினைக்கவில்லை. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன்:

”மயில்சாமி மிகச் சிறந்த நண்பர். நான் இவர்களுக்கு செய்கிறேன். நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யுங்கள் என்று உதவிகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்” என்றார்.

நடிகர் ஜெயபிரகாஷ்:

”மயில்சாமி, சேர்த்து வைக்கும் ஆசையே இல்லாதவர். மற்றவர்களுக்காக கையில் இருப்பதைக் கொடுத்துக்கொண்டே இருப்பவர். பிறருக்கு உணவு பரிமாறி அதனால் மகிழ்ச்சி அடைபவர்” என்றார்.

நகைச்சுவை நடிகர் சென்ட்ராயன்:

“எனக்கு வாய்ப்பை வாங்கிக்கொடுத்து வசனத்தை சொல்லிக் கொடுத்தவர் மயில்சாமி தான். எம்.ஜி.ஆர் அவர்களை நான் பார்த்ததில்லை, அவர் உருவத்தில் மயில்சாமி அண்ணனை நான் பார்த்துள்ளேன். கஷ்டம் என்று யார் வந்து கேட்டாலும், கையில் இருப்பதை எடுத்து கொடுத்துவிட்டு அவருடைய பிரச்சினையை பின்பு தான் தீர்த்துக் கொள்வார். சிவராத்திரி அன்று மறைந்திருக்கிறார். இவரை நான் கடவுளாக தான் பார்க்கிறேன்” என்றார்.