திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரைப்பிரபலங்கள் முகநூல்
தமிழ்நாடு

‘கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?’ - திருச்செந்தூர் முருகனை காண படையெடுக்கும் திரைப்பிரபலங்கள்!

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலுக்கு, தினம் ஒருவர் என்ற அளவில் தரிசனத்துக்காக குவிகின்றனர் திரை நட்சத்திரங்கள்.

PT WEB

செய்தியாளர்: சுடலைமணி

திருமுருகனை சரணடைந்தால் நிச்சய வெற்றி என்ற நம்பிக்கையில், செந்தூரை நாடி வருகின்றனர் நட்சத்திரங்கள். வங்கக்கடலின் அலைகளும் உப்புக்காற்றும் தாலாட்ட, பழமை மாறாமல் கம்பீரமாக வீற்றிருக்கிறது முருகப்பெருமானின் திருத்தலம்.

சமுத்திரத்தில் நீராடி விட்டு, கடற்கரை மணலில் ஈரக்காலைப் பதித்தபடி, கோயிலின் கோபுரத்தை பார்த்தாலே பரவசமாகி விடுவார்கள் திருமுருகனின் அடியார்கள். கோயிலுக்கு உள்ளே சென்று, அழகிற்கே உதாரணமான முருகனை கரம் குவித்து தரிசிக்கும்போது, அரோகரா என்று முழங்கி சிலிர்ப்பார்கள் பக்தர்கள்.

பழமையும் புகழும் மிக்க முருகனின் இரண்டாம் படைவீடு, இப்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போலவே மாறிவிட்டது. திருவிழா நாள்களில், முருகப்பெருமானின் திருமுகத்தைக் காண, சிறப்பு தரிசனத்தில் சென்றால் கூட பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். சாதாரண நாள்களில் குறைந்தபட்சம் 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

அந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது திருச்செந்தூரில். அரசியல் தலைவர்களுக்கும் திருச்செந்தூர் முருகன், இஷ்ட தெய்வமாக திகழ்கிறார். திருச்செந்தூருக்கு அருகிலேயே, தேரிக்காடு, அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில், மணப்பாடு, தூத்துக்குடி துறைமுகம், நெல்லை, தென்காசி, குற்றாலம், மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் என, படப்பிடிப்புக்கான ஏராளமான தலங்கள் உள்ளன.

Actor Rakshan

இப்படியாக படப்பிடிப்புக்கு வரும் திரை நட்சத்திரங்கள், முருகனின் அருளை வேண்டி திருச்செந்தூருக்கு ஓடோடி வருவதைக் காண முடிகிறது. நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி; பிரபல நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன்; நகைச்சுவை நடிகர் செந்தில்; ரமணா, கஜினி படங்களின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்; சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ரக்ஷன், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, அவரது மனைவி நடிகை ரோஜா என முருகனின் திருவடி தேடி சமீபத்தில் அடுத்தடுத்து திருச்செந்தூரில் சரணடைந்தனர்.

இவர்களன்றி சமீபத்தில் ஜப்பானியர்கள் சிலர்கூட திருச்செந்தூர் வந்து முருகனை தரிசித்து சென்றனர். சூரனை வீழ்த்தி ஜெயந்திநாதராக வீற்றிருக்கும் திருச்செந்தூர் முருகனை தரிசித்தால், ஜெயம் நிச்சயம் என நம்புகின்றனர் திரையுலகினர். இதற்காகவே, தங்களது அடுத்தடுத்த படைப்புகளின் வெற்றிக்காக, திருமுருகனின் திருவடியில் தஞ்சமடைந்து வருகின்றனர்.